துருக்கி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி – பெண் பயங்கரவாதியாக இருக்கலாம் என சந்தேகம்

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (13:52 IST)
மத்திய இஸ்தான்புல்லியின் பரபரப்பான பகுதியில் நடைபெற்ற வெடிவிபத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 81 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 4:20 மணியளவில் தக்சிம் சதுக்கம் பகுதியிலுள்ள ஒரு கடை வீதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக இஸ்தான்புல் நகர ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

இது குறித்து ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள துருக்கி உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் சுலைமான் சாய்லு, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். இக்கட்சி துருக்கியில் இருக்கும் குர்திஸ்தான் பகுதியை தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்று கோரும் ஆயுதக் குழுவாகும்.

துணை அதிபர் ஃபுவாட் ஒக்டே, குண்டுவெடிப்பு ஒரு பெண்ணால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அதிபர் தாயீப் எர்துவான் கூறினார்.

அவர் இஸ்தான்புல்லில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, “கொடூரமான தாக்குதல்” என்று இந்தத் தாக்குதலைக் குறிப்பிட்டு கண்டனம் செய்தார். மேலும் “பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்” காற்றில் பரவியிருப்பதாகக் கூறினார்.

நீதி அமைச்சர் பெகிர் போஸ்டாக் துருக்கிய ஊடகத்திடம் பேசியபோது, குண்டுவெடிப்பு நடைபெறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு பெண் ஒருவர் அந்தப் பகுதியிலுள்ள பெஞ்சில் 40 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருந்தார் என்றார்.

இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

அரசாங்க அமைச்சர் டெரியா யானிக் ஒரு ட்வீட்டில், அரசாங்க அமைச்சக ஊழியர் மற்றும் அவருடைய இளம் மகள் இந்தச் சம்பவத்தில் பலியானவர்களில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

“இஸ்திக்லால் தெருவைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் முன்னும் பின்னுமாகச் சென்றகொண்டிருந்தன. ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்தன,” என்று அப்பகுதியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஆர்லா குரின் தெரிவித்தார்.

பரபரப்பாக இருக்கும் தெருவில் வழக்கமாகத் தங்கள் கடைகளின் வாசலில் நின்று கொண்டிருக்கும் பல கடைக்காரர்கள் திகைத்துப் போனார்கள். இந்தச் சம்பவம் நகரத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று அவர் கூறினார்.

குண்டுவெடிப்பு நடந்தபோது இஸ்திக்லால் தெருவில் உள்ள இன்டர்நெட் கஃபே ஒன்றில் இருந்த ஹயாத், சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்பட்டதாகக் கூறினார்.

“மக்கள் ஓடுவதையும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையை நோக்கி இன்டர்நெட் கஃபே வழியாகச் செல்வதையும் நான் கண்டேன். அது கட்டுப்பாடற்ற உணர்ச்சிப்பெருக்கு நிறைந்து இருந்தது," என்று அவர் கூறினார்.

நேரில் பார்த்த மற்றொரு சாட்சியான ஜெமால் டெனிஸ்ஜி, குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 50மீட்ட தொலைவில் இருந்தார். “கருப்புப் புகை மூடியது. சத்தம் கிட்டத்தட்ட காது கேட்காத அளவுக்கு மிகவும் வலுவாக இருந்தது,” என்று ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார்.

தாக்குதலைத் தொடர்ந்து இஸ்தான்புல் மக்களிடையே “அச்சம் நிலவுகிறது” என்று 20 வயதான ஐயுப் பிபிசியிடம் கூறினார். மேலும், மக்கள் தக்சிம் போன்ற நெரிசலான பகுதிகளில் இருந்து விலகியிருக்கத் தேர்வு செய்யலாம் என்றும் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து துருக்கிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
“பயங்கரவாதத்தை எதிர்ப்பதில்” அதன் நேட்டோ கூட்டாளியுடன் “தோளோடு தோள் நிற்பதாக” அமெரிக்கா கூறியதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கேரின் ஜான் பியர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் துருக்கியில் எழுதியுள்ள ஒரு ட்வீட்டில், “உங்கள் வலியை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் உடங்களுடன் இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.

யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, துருக்கிய மொழியில் எழுதிய ஒரு ட்வீட்டில், “நட்புமிக்க துருக்கிய மக்களின் வலி எங்கள் வலி,” என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான், இத்தாலி, க்ரீஸ் உள்ளிட்ட நாடுகளும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தின.

இஸ்திக்லால் தெரு, கடைகள் நிரம்பிய நகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்று. இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டில் தற்கொலை குண்டுதாரியால் இலக்கு வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்