இன்று ஏன் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது? – சில சுவாரஸ்யமான அம்மா தகவல்கள்!

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (12:09 IST)
இன்று உலக அன்னையர் தினத்தையொட்டி சமூக வலைதளங்களில் அதுகுறித்த ஹேஷ்டேகுகளை பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பலர் தங்கள் அன்னையருடன் செல்பிக்கள், டிக்டாக் வீடியோக்கள் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? முதன்முதலாக 1908ம் ஆண்டுதான் அன்னையர் தினம் கொண்டாட தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் விர்ஜீனியா பகுதியை சேர்ந்தவர் அன்னா ஜாவிஸ். இவர் தனது தாய் மீது தீராத பாசம் கொண்டிருந்தார். அன்னாவின் அம்மா இறக்கும் தருவாயில் தனது நினைவு நாளை பொருள்தரும் ஒரு நாளாக கொண்டாட வேண்டும் என அன்னாவிடம் கேட்டுக் கொண்டாராம்.

தனது அம்மாவின் ஆசைப்படி அன்னையர் தின அமைப்பு ஒன்றை நிறுவிய அன்னா அதன்மூலம் பலருக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். அந்த சமயம் முதல் உலக போர் தொடங்கி பல வீரர்கள் போரினால் காயம்பட்டனர். போர் வீரர்களை காப்பாற்ற மருத்துவ குழுவாக மாறிய அன்னையர் தின அமைப்ப்பு பல வீரர்களை காப்பாற்றியது.

அதற்கு பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற வூட்ரூ வில்சன் அன்னையர் தின அமைப்பின் சேவையை போற்றும் விதமாக மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை உலக அன்னையர் தினமாக கொண்டாடுவதாக அறிவித்தார். அன்று முதல் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தற்போது அன்னையர் தினத்திற்கு வயது நூறுக்கும் மேல் ஆகிவிட்டது.

உலகம் முழுவதிலும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுகிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டாலும் சில அரபுநாடுகளில் மார்ச் 21 அன்றுதான் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்திற்கும் அம்மாவுக்கு ஆரம்பம் தொட்டே பெரும் செண்டிமெண்ட் உண்டு. தமிழ் சினிமாக்களில்தான் மற்ற எந்த மொழியை விடவும் அம்மா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டுள்ளதாம். “டில்லிக்கே ராஜாவானாலும் பல்லிக்கு பிள்ளைதானே” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல உலகம் போற்றும் எந்த பதவியிலிருந்தாலும், இல்லை சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் கூட தாயின் அன்பு பாகுபாடு பார்ப்பதில்லை. உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களை போற்றும் விதமாக இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் போற்ற மறந்துவிட்ட நமது அம்மாவுக்கு அன்பை செலுத்த கற்றுக்கொள்வோம்!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்