அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

Mahendran

செவ்வாய், 15 ஜூலை 2025 (17:46 IST)
இன்ஸ்டாகிராம் மூலம் அர்ச்சனா என்ற பெயரில் பழகிய ஒருவரின் காதல் வலையில் சிக்கி, அவர் கொடுத்த ஆலோசனையின்படி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்த பெங்களூரு நபர் ஒருவர் தற்போது ரூ. 44 லட்சம் ஏமாந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரை சேர்ந்த ஒருவர் தனது வாழ்க்கை துணையை இன்ஸ்டாகிராமில் தேடி கொண்டிருந்தபோதுதான், அர்ச்சனா என்பவர் அறிமுகமானார். முதலில் சாதாரண நட்பாக தொடங்கிய இந்த உறவு, அதன் பிறகு காதலாக மாறியது. ஆன்லைன் மூலமே இருவரும் ரொமான்ஸாக பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அர்ச்சனா ஒரு பிட்காயின் முதலீட்டு நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
 
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என்று அர்ச்சனா தனது காதலனிடம் கூறிய நிலையில், அவரை நம்பி முதலில் சிறிய முதலீடுகள் செய்தார். அந்த முதலீட்டுக்கு நல்ல வருமானம் வந்தது மட்டுமின்றி, அர்ச்சனாவின் கவர்ச்சியான பேச்சால் கவரப்பட்ட அவர், அடுத்தடுத்து தனது வங்கிக் கணக்கிலிருந்து கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தார்.
 
ஒரு கட்டத்தில் ரூ. 44 லட்சம் அவர் முதலீடு செய்த நிலையில், அவர் தனது லாபத்தை திரும்ப எடுக்க முயன்றபோது, அவரது கணக்கு "அன்லாக்" செய்யப்பட்டிருப்பதாகவும், அதை விடுவிக்க வேண்டும் என்றால் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வந்தது. இதனை அடுத்து அர்ச்சனாவை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்த நிலையில், இது குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் போலியான நெட்வொர்க் இந்த விஷயத்தில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்