தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சந்து ரத்தோட் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தப்பிக்க முயன்றபோது அவர் மீது மிளகாய்ப்பொடியை தூவியதாகவும் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு பூங்காவில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சந்து ரத்தோட் நடைபயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு வெள்ளை நிற காரில் வந்த நான்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ரத்தோடை சுற்றி வளைத்து தாக்கினர். அவர் தப்பித்து ஓட முயன்றபோது, அவர் மீது மிளகாய்ப்பொடியை தூவியதாகவும், அதன் பிறகு துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிகிறது. ரத்தோட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். ஹைதராபாத்தில் ரத்தோட் மிகுந்த செல்வாக்கு உடையவர் என்பதால், அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரத்தோடுக்கும் ராஜேஷ் என்பவருக்கும் நீண்டகாலப் பகை இருந்ததாகவும், ராஜேஷ் மீது தான் சந்தேகம் படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களைத் திரட்டி, தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முயற்சித்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.