"தோழர் பினராயி விஜயன்" என்ற பெயரில் வந்த மின்னஞ்சலில், மும்பை பங்குச்சந்தையின் அலுவலக கட்டிடத்தில் நான்கு ஆர்.டி.எக்ஸ் மற்றும் ஐ.இ.டி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சரியாக மாலை 3 மணிக்கு வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களும் காவல்துறையினரும் பங்குச்சந்தை அலுவலகத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
ஆனால், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மின்னஞ்சல் அனுப்பிய அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நேற்று டெல்லியில் இரண்டு சி.ஆர்.பி.எஃப் பள்ளிகள் மற்றும் ஒரு கடற்படை குழந்தைகள் பள்ளி ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.