அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, சீனாவுக்கு எதிராக வரி அதிகரிக்கும் முடிவை எடுத்துள்ளது. இதன் படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 104% வரி விதிக்கப்படவுள்ளது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது என வெள்ளை மாளிகை அறிவித்தது.
சீனா கடந்த வாரம் அமெரிக்காவுக்கு 34% பதிலடி வரி விதித்தது. இதனையடுத்து சீனா இந்த வரியை நீக்கவேண்டும் என அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. ஆனால் சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், தற்போது அமெரிக்கா வரியை 104% ஆக உயர்த்தியுள்ளது.
"சீனாவின் நடவடிக்கை தவறு. அவர்கள் பதற்றத்தில் முடிவெடுத்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், பேச்சுவார்த்தை அவசியம்," என டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்ட் கூறுகையில், "சீனா நியாயமற்ற முறையில் பதிலடி கொடுத்தது. ஜனாதிபதி டிரம்ப் எப்போதும் தனது நாட்டின் நலனுக்காக வலுவான முடிவுகளை எடுப்பார். ஆனால், சீனா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால், அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது," என்றார்.