அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதானி நிறுவனத்துடன் செய்து கொண்ட ரூபாய் 5900 கோடி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக கென்யா அதிபர் அறிவித்துள்ளார். இதனிடையே, அடுத்ததாக இலங்கை அரசும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட மன்னார் காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக்கா பரிசீலனை செய்து வருவதாகவும், எந்த நேரத்திலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உத்தரவை அவர் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 484 மெகா வாட்டுகள் மின்சார உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மேற்கொள்ளப்பட இருந்தது. இந்த திட்டம் குறித்த வழக்கு ஏற்கனவே இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இருந்தது.
பிரதமர் மோடி வற்புறுத்தியதால், இந்த திட்டத்தை முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.