60 வயதில் மிஸ் யுனிவர்ஸ்..! அர்ஜென்டினா பெண் சாதனை..!!

Senthil Velan
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (09:59 IST)
அர்ஜென்டினாவில் 60 வயது பெண் ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ் பட்டம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
 
அழகிப் போட்டி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இளமை தான்… ஆனால், தென் அமெரிக்க நாடானா அர்ஜெண்டினாவில், 60 வயது பெண் ஒருவர் அழகிப் போட்டியில் பட்டம் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 
 
அர்ஜென்டினாவின் லா பிளாட்டாவைச் சேர்ந்த 60 வயதான அலெஹேன்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ், வழக்கறிஞராகவும், பத்திரிக்கையாளராகவும் பணிபுரிந்து வரும் நிலையில், தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற “மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்” 2024 போட்டியில் கலந்து கொண்டார்.
 
18 முதல் 28 வயதுடைய பெண்கள் மட்டுமே அழகி போட்டியில் பங்கேற்க முடியும் என்ற விதியை, கடந்த ஆண்டு தளர்த்திய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு, அழகி போட்டியில் பங்கேற்க வயது ஒரு தடை இல்லை என அறிவித்தது. இதனால், 60-வது வயதில் அழகிப் போட்டியில் பங்கேற்ற ரோட்ரிகஸ், தனது நேர்த்தியான, நளினமான நடையால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.
 
இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில், 60 வயதான ரோட்ரிக்ஸ், அழகிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். வெற்றிக்கு பிறகு பேசிய ரோட்ரிக்ஸ், அழகிப் போட்டியில் அதிக வயதில் வென்றவர் என்ற முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி கொள்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்