ரஷ்யா நடத்தி வரும் போரால் உருகுலைந்துள்ள உக்ரைனுக்கு உதவி பொருட்களை வழங்கியுள்ளது இந்தியா.
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷ்யா தான் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரஷ்ய அடையாள அட்டைகளை அளித்து அப்பகுதிகளை ரஷ்யாவின் பிராந்தியமாக மாற்றி வருகிறது.
கடந்த 6 மாத காலமாக நடந்து வரும் போரால் இருதரப்பு ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் உக்ரைன் பொதுமக்களும் ஏராளமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த பேரிடரில் இருந்து உக்ரைன் மீளும் வகையில் உலக நாடுகள் பல உதவிகளை அளித்து வருகின்றன.
அந்த வகையில் இந்தியா உக்ரைனுக்கு தேவையான மனிதநேய உதவிப் பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது உக்ரைன் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 7,725 கிலோ மனிதநேய பொருட்களை இந்தியா உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வர இந்தியா ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.