அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது ஏற்கனவே சில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில், தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாடல் அழகி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டினை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
இந்த நிலையில், மாடல் அழகி ஸ்டேசி வில்லியம்ஸ் என்பவர் ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, டிரம்ப் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று கூறி இருக்கிறார். ஒரு கிறிஸ்துமஸ் தினத்தில் டிரம்பை முதன் முதலில் சந்தித்ததாகவும், எனது நண்பரும் அப்போது உடன் இருந்ததாகவும், அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென டிரம்ப் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், எனக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டிரம்ப் தரப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் வெளிவந்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது, இது முழுக்க முழுக்க போலி கதை என்றும் கமலா ஹாரிஸ் ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.