அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ள பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ், 420 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ஒரு பக்கம் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் ஆதரவு கொடுத்துள்ளார். அதேபோல், இன்னொரு பக்கம் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடையாக பில் கேட்ஸ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகை இந்திய மதிப்பில் ரூபாய் 420 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பில்கேட்ஸ், நன்கொடை குறித்து தெரிவிக்கவில்லை என்றாலும், "இந்த தேர்தல் வித்தியாசமானது. டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள், குடும்ப கட்டுப்பாடு, உலகளாவிய சுகாதார திட்டங்கள் கவலை அளிக்கின்றன," என்று தெரிவித்தார். இதிலிருந்து அவர் கமலா ஹாரிஸ் அவர்களை ஆதரிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் "சுகாதார பாதுகாப்பை மேம்படுத்துதல், வறுமையை குறைத்தல், மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் வேட்பாளரை ஆதரிக்கிறேன்," என்றும், "நான் நீண்ட காலமாக பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பயணித்தேன்," என்றும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.