துபாய் அரச குடும்பத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை: பாதுகாப்பு கோரி ஐநா கவுன்சிலிடம் கோரிக்கை விடுக்கும் முன்னாள் மனைவி

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (22:45 IST)
துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் முன்னாள் மனைவியின் வழக்கறிஞர்கள் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
 
ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிகாரிகளுடன் இணைந்து சேனாப் ஜாவத்லி மற்றும் அவரின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
தன் கணவர் ஷேக் சயீத் பின் மக்தூம் பின் ரஷித் அல் மக்தூமிடமிருந்து குழந்தைகளை பெறுவதற்கான போராட்டத்தில் ஜாவத்லி அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாகவும், தவறாக நடத்தப்பட்டார் என்றும் அந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்தூமின் வழக்கறிஞர்கள் ஜாவத்லி தாயாக இருப்பதற்கு தகுதியற்றவர் என தெரிவித்தனர். ஆனால் ஜாவத்லி அதை மறுத்திருந்தார்.
 
துபாய் அரச குடும்பத்தில் சர்ச்சை
துபாயின் ஆளும் அரச குடும்பத்தில் எழுந்துள்ள சமீபத்திய பிரச்னை இது.
 
"தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்" என ஜாவத்லி கோரிக்கை விடுக்கும் காணொளி பிபிசிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
 
"எனது குழந்தைகளும் நானும் எங்களது வாழ்க்கை குறித்தும் பாதுகாப்பு குறித்தும் அச்சத்தில் உள்ளோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
 
 
சிவப்புக் கோடு
 
மேலும், "நாங்கள் தற்போது வீடற்றவர்களாக இருக்கிறோம். துபாயில் உள்ள ஒரு விடுதியில் சிக்கியுள்ளோம். நானும் எனது குழந்தைகளும் என்னை கைது செய்துவிடுவார்கள் என்றோ அல்லது எனது குழந்தைகளை என்னிடமிருந்து பிரித்துவிடுவார்கள் என்றோ அஞ்சுகிறோம். அதனால் இங்கிருந்து வெளியே வர இயலாது." என தெரிவித்துள்ளார்.
 
அஜர்பைஜானை சேர்ந்த முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனையான ஜாவத்லி ஷேக் சயீத்திடமிருந்து 2019ஆம் ஆண்டின் முடிவில் விவாகரத்து பெற்றார். தற்போது தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தங்கியுள்ள அவர், நாட்டைவிட்டு வெளியேறினால் தனது குழந்தைகளை பிரிய நேரிடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார்.
 
கடந்த மூன்று ஆண்டுகளாக தனது முன்னாள் கணவருடன் குழந்தைகளின் இருப்பிற்காக போராடி வருகிறார். இவர்களுக்கு 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று துபாயில் வசித்து வந்தனர். ஷேக் சயீத், ஆளும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். துபாய் அரசரான ஷேக் முகமத் பின் ரஷித் அல் மக்தூமின் உடன் பிறந்தவரின் மகன் தான் ஷேக் சயீத்.
 
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தலையிட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையில், ஜாவத்லி வெளியில் செல்வதற்கும், கருத்துக்களை சொல்வதற்குமான சுதந்திரம் பறிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் பல யுக்திகளை பயன்படுத்தி ஜாவத்லி மிரட்டப்படுவதாகவும் தெரிவித்தனர்.
 
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜாவத்லியின் வீட்டிற்கு துபாய் காவல்துறை நுழைந்து ஜாவத்லி, அவரின் குழந்தைகள் மற்றும் பெற்றோரை தாக்கினர் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மூன்று ஆண்டுகளாக தொடரும் காவல்துறை சோதனை
கடந்த மூன்று வருடங்களாக காவல்துறையினர் தனது வீட்டிற்கு வந்து சோதனை செய்வதும், நீதிமன்றத்திலிருந்து சம்மன் வருவதும், கைது ஆணைகள் வருவதும் வாழ்க்கையின் தினசரி அங்கமாகிவிட்டதாக தெரிவித்தார் ஜாவத்லி.
 
அதேபோல கோரிக்கைகள் கொண்ட 50 பக்க ஆவணத்தில் தனது வழக்கு பாரபட்சமற்ற முறையில் விசாரிக்கப்படவில்லை என்றும் ஜாவத்லி தெரிவித்தார்.
 
எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் குழந்தைகள் ஷேக் சயீதிடம்தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் ஜாவத்லி தெரிவித்தார்.
 
மேலும் அப்பட்டமான, நியாயமற்ற, பாரபட்சமான நீதி முறையை ஜாவத்லி எதிர்கொண்டதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மறுபுறம் ஷேக் சயீத்தின் வழக்கறிஞர்கள், ஜாவத்லி ஒரு தகுதியற்ற தாய் என்றும், குழந்தைகள் வாழ தகுதியற்ற ஒரு இடத்தில் அவர்களை வைத்திருப்பதாகவும், இதனால் மூன்றாவது மகளின் உடல்நிலை மோசமடைந்துவிட்டதாகவும், அவர்களை பள்ளிக்கும் அனுப்பவில்லை என்றும் துபாய் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
 
இதை மறுத்த ஜாவத்லி, இதற்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
 
தற்போது தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் அவர்களை அழைத்து கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் அவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால் துபாய் அதிகாரிகளை ஜாவத்லி எதிர்க்க நேரிட்டுள்ளது.
 
நிலவும் சூழல் குறித்து விவாதிக்க பள்ளி அழைப்பு விடுத்துள்ளது.
 
குழந்தைகள் ஷேக் சயித்திடமே இருக்க வேண்டும் என்ற ஆணையை எதிர்த்து ஜாவத்லி மேல் முறையீடு செய்திருந்தாலும், எந்த நேரத்திலும் தனது குழந்தைகள் தன்னிடமிருந்து பிரிக்கப்படலாம் என ஜாவத்லியும் அவரது வழக்கறிஞர்களும் நம்புகின்றனர்.
 
இதற்கு முன்பு நடந்த பிரச்னைகள்
 
சேனாப் ஜாவத்லியின் புகார் இதற்கு முன்பு துபாய் அரசு குடும்பத்தினர் அல்லது அவர்களின் மனைவியுடன் நடந்த பிரச்னையை போன்றே இருப்பதாக துபாயில் உள்ள சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் முன்னாள் மனைவி ஹாயா 2019ஆம் ஆண்டு உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பிச் சென்றார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் பிரிட்டனில் அதி உயர் நீதிமன்றத்தில் குழந்தைகளுக்கான வழக்கில் வெற்றி பெற்றார். குழந்தைகள் அவரிடமே இருக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
மற்றொரு சர்ச்சையாக இளவரி லத்திஃபா தனது குடும்பத்தின் அதீத கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க 2018ஆம் ஆண்டு துபாயிலிருந்து தப்பிச் சென்றார். பின் அவர் இந்திய பெருங்கடலில் மடக்கி பிடிக்கப்பட்டு துபாய்க்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டார்.
 
அதன்பின் அவர் சிறைப்பிடிக்கப்பட்டதாக ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தெரிவித்தார். அப்போதிலிருந்து அவர் அரிதாகவே வெளியில் தோன்றுகிறார். ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக துபாய் அரச குடும்பம் தெரிவித்தது.
 
அதேபோல ஜாவத்லியும் தனது விஷயத்தில் ஐநா தலையிட வேண்டும் என்று கோருகிறார்.
 
"நாங்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளோம்" என அவர் பிபிசிக்கு கிடைத்த விடியோவில் தெரிவித்துள்ளார்.
 
ஜாவத்லியின் வழக்கறிஞர்களில் ஒருவரான ரோட்னி டிக்சனிடம் பிபிசி பேசியது.
 
"நிலைமை மோசமாகவில்லை. இப்போதும் அனைத்து தரப்பினருக்கு ஏதுவாக இந்த வழக்கை முடிக்கலாம்" என்றார்.
 
இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்