அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. உங்களது மொபைல் போன், ஸ்மார்ட் டிவி மூலம் அனைத்து உரையாடல்களையும் ஒட்டுக் கேட்கிறது என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றையும் கூட அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. கண்காணித்து வருகின்றன. இதனால், பல நாடுகளின் கடும் கண்டனத்திற்கு சி.ஐ.ஏ. ஆளானது. இந்நிலையில், மொபைல் போன், ஸ்மார்ட் டிவி மூலம் அனைத்து உரையாடல்களையும் சி,ஐ.ஏ. ஒட்டுக் கேட்கிறது என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சி.ஐ.ஏ. நவீன மின்னணுக் கருவிகளில் இதற்கென ஒரு வைரஸ் பொருத்தியுள்ளது! இதன் மூலம் ஒட்டுக் கேட்கப்படும் அனைத்து உரையாடல்களும், நேரடியாக சி.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அனுப்பப் படுகின்றன.
வாட்ஸ் ஆப் கூட பாதுகாப்பானது அல்ல என்று கூறியுள்ள விக்கிலீக்ஸ் சி.ஐ.ஏ., பொருத்தியுள்ள வைரஸ் அதையும் கண்காணிக்க வல்லது என்று தெரிவித்துள்ளது.
கணினி உள்ளிட்ட தனிப்பட்ட மின்னணு கருவிகளில் ஊடுருவுவதற்கான நச்சு நிரல்களை எப்படி உருவாக்குகிறது என்பதை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துவதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஐஃபோன்கள், ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் செல்போன்கள், மைக்ரோசாஃப்ட் மென்பொருள்கள், சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் போன்றவற்றை, பேசுவதை ஒட்டுக் கேட்கும் மைக் போல மாற்றுவதற்கான கருவிகள் சிஐஏ வசம் உள்ளதையும் இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவி நிறுத்தப் பட்டிருந்தாலும், அதன் மூலம் ஒட்டுக் கேட்க முடியும். ஆனால் டிவி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். அதிலுள்ள மைக்ரோபோன் அனைத்து உரையாடல்களையும் உள்வாங்கிக் கொண்டிருக்கும். குறிப்பாக சாம்சங் டிவியில் இந்த வைரஸ் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் நாம் தினசரி உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் பயணிக்கும் கார்களிலும் உளவுப்பார்ப்பதாகவும் விக்கிலீக்ஸ் குற்றம் சாட்டியுள்ளன. சிஐஏ தொடர்பான 9 ஆயிரம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.