செல்போனை தொலைத்த இளம் பெண் ஒருவர், காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பிட்டு, " போலீசை விட திருடன் எவ்வளவோ மேல்" என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது சகோதரியின் செல்போன் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். அப்போது, "செல்போன் எடுத்தவனை உடனே டிராக் செய்யாமல், எங்களை கேள்வி மேல் கேள்வி கேட்டனர். போனை எதற்காக தொலைத்தீர்கள்? நீங்கள் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று மாறி மாறி எங்களையே கேள்வி கேட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "நாங்கள் போனை ட்ராக் செய்து தருவதாக கூறிய போது, அப்படியானால் நீங்களே அதை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் பதில் அளித்ததாகவும்" அவர் கூறியுள்ளார்.
அதன் பின், அதிர்ஷ்டவசமாக செல்போனை திருடிய திருடன் தன்னுடன் தொடர்பு கொண்டு, "செல்போனை தர வேண்டும் என்றால் பணம் வேண்டும்" என்று கேட்டுள்ளார். அந்த திருடனுக்கு பணத்தை கொடுத்த பின், நாங்கள் செல்போனை மீட்டுக் கொண்டோம். "எங்களை கேள்வி மேல் கேள்வி கேட்ட போலீசை விட திருடன் எவ்வளவோ மேல்" என்று அவர் பதிவு செய்துள்ளார்.