அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

Mahendran

வியாழன், 6 பிப்ரவரி 2025 (17:38 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு   முதல் முறையாக டிஆர்பி போட்டி தேர்வு மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இதுவரை அந்த பல்கலைக்கழகத்தின் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களும் முதல்முறையாக டிஆர்பி போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, உதவி பேராசிரியர் உள்பட சில பதவிகளுக்கான நேரடி நியமன அறிவிப்பு வெளியாகி, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. ஆனால், பணி நியமனம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது இந்த பணிகளுக்கு போட்டி தேர்வு மூலம் காலியான பதவிகள் பூர்த்தி செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் என்பவர் அறிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா என்பது குறித்து ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்