தற்போது உலகம் முழுவதும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அனைவரது ரகசியங்களும் பதிவு செய்யப்படும் என செல்போனை கண்டுபிடித்த விஞ்ஞானி கூறியுள்ளார்.
1970கள் வரையிலும் உலகம் முழுவதும் தொலைத்தொடர்பிற்கு லேண்ட்லைன் போன்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. 1973ல் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்டின் கூப்பர் தான் முதன்முதலில் வயர் இணைப்பு அற்ற செல்போனை கண்டுபிடித்தார். அப்போது பெரிய செங்கல் சைஸில் இருந்த செல்போன் தற்போது குறைந்து கையடக்கமாக மாறிவிட்டது. பேசுவதற்காக மட்டுமே பயன்பட்டு வந்த செல்போன் தற்போது அதிவேக இணைய சேவை, பல்வேறு வசதிகளுடன் ஒரு மினி உலகமாக மாறிவிட்ட நிலையில் சைபர் க்ரைம் ஆபத்துகளும் அதிகரித்துள்ளன.
சைபர் ஹேக்கர்கள் பலர் பல முக்கியஸ்தர்கள் செல்போனை ஹேக் செய்து விடும் செய்திகள் தினசரி வந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு வகையில் உபயோகமாக உள்ள செல்போன் கொஞ்சம் தவறாக பயன்படுத்தினாலும் அழிவையும் தரவல்லதாக மாறி வருகிறது. இதுகுறித்து செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பரே கவலைப்பட்டுள்ளார்.
தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் உலக மொபைல் காங்கிரஸ் நடந்து வருகிறது. உலகம் முழுவதுமுள்ள செல்போன் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வில் பல புதிய மாடல் ஃபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மார்டின் கூப்பர் “செல்போனின் இருண்ட பக்கங்களை குறித்து நான் கவலைப்படுகிறேன். ஆனால் செல்போனின் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும்” என அவர் கூறியுள்ளார். மார்ட்டின் கூப்பருக்கு தற்போது வயது 94. முதல் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.