‘தேடிவந்து திகைக்கும் கதை சொன்னாய்’ -வணங்கான் அப்டேட் கொடுத்த வைரமுத்து!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:31 IST)
சூர்யா நடித்து வந்த வணங்கான் படத்தில் இருந்து அவர் விலகிய நிலையில் படம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அருண் விஜய் நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார் பாலா. படத்துக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம் விலகிவிட்ட நிலையில் இப்போது ஆர் பி குருதேவ்வை புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளாராம். கதாநாயகியாக ரோஷினி ராஜபிரியன் நடிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

தற்போது மீண்டும் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், படத்தில் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். மேலும் பாடல்கள் பற்றி இயக்குனர் பாலாவோடு இருக்கும் புகைப்படத்தோடு,

“பாலா!
தேடி வந்தாய்;
திகைக்குமொரு
கதைசொன்னாய்;
இதிலும் வெல்வாய்

உடம்பில் தினவும்
உள்ளத்தில் கனவும்
உள்ளவனைக்
கைவிடாது கலை

ஐந்து பாட்டிலும்
ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்

தீராத கங்குகளால்
பழுத்துக்கிடக்கிறது
என் பட்டறை

தோற்காத ஆயுதங்கள்
வடித்துக் கொடுப்பேன்
போய் வா! – வைரமுத்து” என பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு முன்னர் வைரமுத்து பாலா இயக்கிய பரதேசி படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தார். அந்த பாடல்கள் அனைத்தும் பெருவெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்