பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' எதிர்பார்த்த வசூலை தராமல் தோல்வி அடைந்த நிலையில் மணிரத்னம் வீட்டின் முன் தற்கொலை செய்து கொள்வேன் என லைட்மேன் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய்பச்சன் நடித்த 'குரு' திரைப்படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் லைட் மேனாக பணியாற்றிய மணிமாறன் என்பவருக்கு படப்பிடிப்பின் போது, ரத்தம் சம்பந்தமான தொற்று நோய் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ செலவுகளை கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். மருத்துவ செலவுக்காக தனக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைட்மேன் சங்கத்திற்கு அவ்ர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இருதரப்பினரும் மணிமாறனை கண்டுகொள்ளாததால் லைட்மேன் சங்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மணிமாறன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் மணிமாறனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தும் தீர்ப்பை மதித்து லைட் மேன் சங்கம், அவருக்கான நிவாரண உதவியை செய்யவில்லை.
இந்த நிலையில் தனக்கு குரு படத்தில் பணியாற்றிய போதுதான் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், எனவே தன்னுடைய இந்த நிலைக்கு மணிரத்னம்தான் பொறுப்பு என்றும் அவர் தனக்கு தகுந்த நிவாரண உதவி செய்யவில்லை என்றால் அவர் வீட்டின் முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்ய உள்ளதாகவும் மணிமாறன் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.