பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். வாசியோகம் என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும்.
அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்யும்போது கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும்.
வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம். இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும். மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதி அமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும்.
இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும். பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார்.
மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலே ஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.