டைட்டானிக் கதையை முதலில் டி காப்ரியோவிடம் சொன்னபோது அவருக்கு அந்த கதை பிடிக்கவில்லை என்று ஜேம்ஸ் காமரூன் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியானார்டோ டி காப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடித்து 1997ல் வெளியான படம் டைட்டானிக். உலகம் முழுவதும் ஹிட் அடித்த டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றதுடன் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த காதல் திரைப்படமாகவும் உள்ளது. உலகம் முழுவதும் 200 கோடி அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.
டைட்டானிக் படம் வெளியாகி இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதை கொண்டாடும் விதமாக மீண்டும் டைட்டானிக் படம் 4கே தரத்தில், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வெளியாகும் இந்த படத்தை காண ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது. இதற்கான புதிய போஸ்டரை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இதுபற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் “இந்த படத்தின் கதையை முதலில் டி காப்ரியோவிடம் சொன்னபோது “என்ன சலிப்பான கதை” எனக் கூறி காதல் கைகூடாத கதையில் நான் நடிக்கமாட்டேன் என்றார். நான் அவரிடம் கதையின் ஆழத்தை விளக்கிக் கூறியபோதுதான் அவர் சவாலான கதை என நடிக்க ஒத்துக்கொண்டார்” என 25 ஆண்டுக்கு முந்தைய சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.