ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய ஹிட் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. துறைமுகப் பின்னணியில் தங்கக் கடத்தல் பற்றிய படமாக கூலி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் முதல் தனிப்பாடலான சிக்குடு பாடல் சமீபத்தில் ரிலீஸாகி இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் இந்த பாடல் பற்றி பேசியுள்ள இசையமைப்பாளர் அனிருத் “இந்த பாடலை மிகவும் சிறப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கியுள்ளார். அதைப் பார்த்த போது நாங்கள் வியந்துவிட்டோம். ரஜினி சாரின் விண்டேஜ் (80 கள் மற்றும் 90 கள்) ஸ்டைல் நடனத்தை இந்த பாடலில் காணலாம் என எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.