ப்ராங்க் ஷோ அத்துமீறலா? பிரான்க்ஸ்டர்களை இனி இப்படியும் செய்யலாம்

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (13:03 IST)

கொரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்து யூடியூப் சேனல்கள் புற்றீசல்களை போல பெருகிவிட்டன. யூடியூபில் இருந்து எளிதில் வியூஸ்கள் பெற்று வருமானம் ஈட்ட பலரும் கையில் எடுக்கும் உத்தி 'ப்ராங்க் ஷோ'.


பொது இடங்கள், கல்லூரி வளாகங்கள், அலுவலகம், குடியிருப்புகளில் கேமிராக்களை 'செட்' செய்து பொதுமக்களிடம் 'ப்ராங்க்' (உணர்வைத் தூண்டி கேலி செய்வது அல்லது அவர்களின் உணர்வைப் பதிவு செய்வது) செய்யும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் காணக் கிடைக்கின்றன.

அண்மையில் கோவையைச் சேர்ந்த குறிப்பிட்ட யூடியூப் சேனல் ஒன்று சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களை கைநீட்டி அடிப்பது போன்ற ப்ராங்க் வீடியோவை வெளியிட்டது. 'Slapping Girls Prank' என்ற தலைப்பில் வெளியான அந்த காணொளிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, உடனடியாக அது சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது.

அந்த காணொளி சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் புதிதாக ப்ராங்க் வீடியோக்கள் எதையும் வெளியிடப்போவதில்லை என அந்த குறிப்பிட்ட யூடியூப் சேனல் அறிக்கை வெளியிட்டது.

"ப்ராங்க் ஷோவில் எல்லை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது"

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பிரபல யூடியூபர் வி.ஜே. சித்து, "ப்ராங்க் ஷோக்களில் மக்கள் முன்னிலையில் நாங்கள்தான் கோமாளிகளாக நடிப்போமே தவிர அவர்களை கோமாளிகளாக கருதியதில்லை. பொது வெளியில் அவசர வேலையாக செல்பவர்களிடம் எந்த வித ப்ராங்கும் செய்வதில்லை. யாரிடமும் அத்துமீறியதில்லை.

வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவோம். குறிப்பிட்ட எல்லைக்குள் நாங்கள் செயல்படுவோம். எல்லை மீறி படம்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சில காணொளிகளை காசு கொடுத்து செட் செய்து எடுக்கிறார்கள். பொது இடங்களில் கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற சில ப்ராங்க் நிகழ்ச்சிகளை ஒருசில யூடியூபர்கள் படம்பிடித்துள்ளனர். அப்படி செய்வது மிகப்பெரிய தவறு. நெருங்கிய யூடியூபர்களிடம் இது தொடர்பாக பேசியும் இருக்கிறேன். அவர்களிடம் போதிய புரிதல் இல்லை." என்றார்.

ப்ராங்க் நிகழ்ச்சி மூலம் சினிமா வாய்ப்பு

"எங்கள் நிகழ்ச்சிகள் மூலம் பல நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. 'பிஜிலி' ரமேஷ் என்பவர் தற்போது சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். கோவையில் கடன் நெருக்கடியில் சிக்கிய ஜோசஃப் என்பவருக்கு தன்னார்வலர்கள் உதவி கிடைத்து இப்போது அவர் நல்ல நிலைமையில் இருக்கிறார். இதுவரை நாங்கள் 100 நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளோம். இருந்தாலும் ஒரு சிலர் செய்யும் தவறான ப்ராங்க் வீடியோக்களை கருத்தில் கொண்டு நாங்கள் 4 மாதங்களுக்கு முன்பே எங்கள் நிகழ்ச்சியை நிறுத்தி விட்டோம்" என்கிறார் விஜே. சித்து

ப்ராங்க் ஷோக்கள் இரண்டு வகை. ஒன்று பொதுமக்களிடம் பேச்சுக்கொடுத்து ப்ராங்க் செய்து படம்பிடிப்பது. இரண்டு, பணம் கொடுத்து நடிக்க ஆட்களை அழைத்து வந்து அதன் மூலம் ப்ராங்க் காட்சிகள் எடுத்து வெளியிடுவது. இந்த 2 வகை நிகழ்ச்சிகளுக்கும் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இளைஞர்கள் மட்டுமின்றி இளம்பெண்களும் 'பிரான்க்ஸ்டர்கள்' ஆக வலம் வருகின்றனர்.

"ப்ராங்க் வீடியோக்கள் பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக எடுக்கப்படுகின்றன. அதற்காக பொதுமக்களிடம் அத்துமீறுவது பெரிய தவறு. நண்பர்களை வைத்து ப்ராங்க் செய்ய சொல்லி சிலர் அழைப்பார்கள். இதுதவிர ஒருசில யூடியூபர்கள் ப்ராங்க் வீடியோக்களை நாடகம் போல ஏற்கெனவெ சொல்லி வைத்து படம்பிடிப்பார்கள்" என யூடியூபர் வி.ஜே பிரபா கூறுகிறார்.

"அத்துமீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்"

"ஒருவரை அவமானப்படுத்தி பிறரை சிரிக்க வைப்பது என்பது சகஜமாகிவிட்டது. பெண்கள் வலிமையால் குறைந்தவர்கள் என இந்த சமூகம் கருதுவது ஆரோக்கியமற்றது. பொது இடங்களில் பெண்களை வைத்து ப்ராங்க் செய்கிறார்கள். அந்த சமயத்தில் அது அவர்களுக்கு பெரும் சங்கடங்களை அளித்தாலும் சம்மந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது புகார் அளிக்க யாரும் பெரிதாக முன் வருவதில்லை. பெண் துன்புறுத்தலுக்கு எதிராக சட்டமே உள்ளது. பெண்களை அவமானப்படுத்துவது, அச்சப்படுத்துவது, அநாகரிகமாக நடந்து கொள்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார் வழக்கறிஞர் அஜிதா.

ஏற்கெனவே 2019இல் உயர்நீதிமன்ற மதுரை கிளை பொது இடங்களில் ப்ராங்க் செய்ய தடை விதித்தது குறித்து கேட்டோம். "ஆம். அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அது நடைமுறையில் இல்லை. தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இதனை கண்காணிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வழக்கில் யாருக்கு அந்த தீர்ப்பு வழங்கப்பட்டதோ அவர்கள் ப்ராங்க் வீடியோக்களை தடுக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றார் அஜிதா.

"பொது இடங்களில் 'ப்ராங்க்' என்கிற பெயரில் அத்துமீறுவோரை காவல்துறை எச்சரிக்க வேண்டும். இதனை கண்காணிக்க வேண்டிய கடமை அரசுக்கும் உள்ளது. ப்ராங்க் வீடியோவால் பாதிப்பை எதிர்கொள்வோர் 'காவலன் எஸ்.ஓ.எஸ்' செயலி அல்லது ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு புகார் அளிக்கலாம்" என வழக்கறிஞர் அஜிதா கூறினார்

"புகார் அளித்தால் நடவடிக்கை"

பொது இடங்களில் ப்ராங்க் வீடியோக்கள் எடுக்கப்படுவதை காவல்துறை கண்காணிக்கிறதா என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.

"ப்ராங்க் என்கிற பெயரில் பொது இடங்களில் அநாகரிமாக நடந்து கொள்வது சட்டவிரோதம். ப்ராங்க் செயல்களால் பாதிக்கப்பட்டதாக காவல்துறைக்கு இதுவரை எந்தவித புகார்களும் வந்ததில்லை. இதை காவல்துறையினர் நேரடியாக கண்காணிக்கும் பட்சத்தில் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க மாட்டார்கள்," என்கிறார் அவர்.

மேலும் பொது இடங்களில் அத்துமீறுவோர் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டதால் உரிய விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐஜி பாலகிருஷ்ணன் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்