ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

Prasanth Karthick

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (10:09 IST)

கோடை விடுமுறை விட்டுவிட்ட நிலையில் பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகிறார்கள். எங்கு போனாலும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பெரும்பாலும் குளிர்ச்சியான மலைப்பகுதிகளுக்கு செல்ல நீங்கள் விரும்புவீர்கள். 

 

அப்படி குளிர்ச்சியான மலைப்பகுதிகளுக்கு செல்வதென்றால் தமிழகத்தில் பெரும்பாலும் இரண்டே சாய்ஸ் ஊட்டி அல்லது கொடைக்கானல்தான். ஆனால் தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகளும் அங்குதான் செல்கிறார்கள் என்பதால் இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ- பாஸ் எடுத்தாலும் சுற்றுலா பகுதிகளில் அமைதியாக சுற்றி பார்க்கும் ஏகாந்தம் கிடைக்காத அளவிற்கு கூட்ட நெரிசலை சந்திக்க வேண்டியிருக்கும். 

 

இந்த பிரச்சினைகள் எல்லாம் இல்லாமல் ஒரு குளிர்ச்சியான மலைப்பகுதிக்கும் செல்ல வேண்டுமென்றால் அதற்கும் தமிழ்நாட்டில் பல பகுதிகள் உள்ளன. ஊட்டி, கொடைக்கானலை விட குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்லக்கூடிய வகையில் உள்ள இந்த பகுதிகள் அதிகமான சுற்றுலா பயணிகள் இல்லாத அமைதியான இடமாகவும் இருக்கிறது.

 

வால்பாறை:

 

 

ஆனைமலை வனச்சரகத்தில் வரும் வால்பாறை கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ள அமைதியான பகுதியாகும். பொள்ளாச்சியில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வால்பாறை தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த ஒரு பகுதி. இங்கு சுற்றி பார்க்க சோலையாறு அணை, குரங்கருவி உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன

 

மேகமலை:

 

 

மேகங்களால் மூடப்பட்ட மலை என்பதால் இதற்கு மேகமலை என்று பெயர். தேனி மாவட்டத்தில் உள்ள இந்த மேகமலை சின்னமனூரில் இருந்து 51 கி.மீ பயண தூரத்தில் உள்ளது. அங்கு மணலார் அணை, கம்பம் பள்ளத்தாக்கு, காபி, தேயிலை தோட்டங்கள் இனிமையாக பொழுதைக் கழிக்க ஏற்ற இடங்கள். மேகமலை அருவியை ரசிக்கலாம்.

 

ஏலகிரி:

 

 

மிகவும் குளிரான மலைப்பகுதியாக இல்லாவிட்டாலும் மிதமான குளிர் நிலையுடன் கண்டு ரசிக்க ஏராளமான இயற்கை காட்சிகளை கொண்டது ஏலகிரி. இரவு நேரங்களில் வானம் முழுவதும் தெரியும் விண்மீன்களை ரசிக்க தமிழ்நாட்டின் பிரபலமான பகுதியாக இருக்கிறது. காலை நேரங்களில் ஏலகிரி ஏரியில் படகு சவாரி செய்வது போன்றவை மனதிற்கு மகிழ்வு அளிக்கும்

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்