இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜி வி பிரகாஷ் மிக இளம் வயதில் வெயில் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களுக்கு தரமான இசையைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
பின்னர் இவர் நடிகராகவும் அறிமுகமாகி இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இப்போது ஜி வி பிரகாஷ் சைந்தவி தம்பதி பற்றி ஒரு தகவல் இணையத்தில் கடந்த சில நாட்களாகப் பரவி வந்தது. அதில் இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் தங்கள் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். அதில் “எங்கள் 11 வருட திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக நாங்கள் இருவரும் முடிவெடுத்துள்ளோம். மன அமைதிக்காகவும் இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் கொண்ட மரியாதைக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
நாங்கள் ஊடகங்கள் மற்றும் நண்பர்களிடம் எங்களின் இந்த முடிவை மதித்து எங்கள் தனியுரிமையை புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறோம். இதுதான் சிறந்த முடிவு என்று நாங்கள் நினைக்கிறோம். உங்களின் ஆதரவும் புரிதலும் இந்த கடின காலத்தில் எங்களுக்கு பேருதவியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.