விஜய் நடித்த கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக ரசிகர்கள் சென்னையில் உள்ள திரையரங்குகளில் பேனர்களை வைத்த நிலையில் அந்த பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நீக்கி உள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள திரையரங்குகளில் அனுமதி இன்றி விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என ஏற்கனவே சென்னை மாநகராட்சி பலமுறை எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் முக்கிய திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
சென்னை காசி திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம் உள்ளிட்ட திரையரங்குகளையும் வெளியே வைக்கப்பட்டிருந்த கோட் படத்தின் பேனர்கள் அகற்றப்பட்டதாகவும் மேலும் திரைப்பட பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சென்னை மேயருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதிய படங்கள் சில தினங்கள் மட்டுமே ஓடக் கூடிய இந்தக் காலகட்டத்தில் விளம்பர பேனர்கள் என்பது மிகவும் முக்கியம். தியேட்டர்களில் பேனர்கள் வைக்கவில்லை எனில், ரசிகர்களின் வருகை வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் விளம்பர பேனர்கள் அகற்றும் நடவடிக்கையில் தியேட்டர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.