தற்காலிகமாக மட்டுமே ஒதுங்கியிருக்கிறேன் - இணை இயக்குனர்களுக்கு பாரதிராஜா ஆடியோ !

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (13:10 IST)
இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகியது குறித்து பாரதிராஜா விளக்கமளித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக ஒருமனதாகப் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சங்கத்துக்குள்ளேயே இதனால் புகைச்சல் உருவானது. இதையடுத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாரதிராஜா. மேலும் ‘ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக பதவியை ராஜினாமா செய்கிறென்.தேர்தலில் போட்டியிடாமல் ஒருமனதாக தேர்வானதால் ஏற்படும் சங்கடங்கள் உருவாகுவதை தவிர்ப்பதற்காகவே இதைச் செய்துள்ளேன்.மூத்த இயக்குநராக சங்க வளர்ச்சிக்கு எனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும்’ என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வரும் 14 ஆம் தேதி மற்ற பதவிகளுக்காக நடக்க இருந்த தேர்தல் தடைபட்டது. இந்நிலையில் ராஜினாமா செய்த பாரதிராஜாவே தலைவர் பதவியை ஏற்க வேண்டும் கோரி இணைஇயக்குநர்கள் சங்கம் சார்பாக பாரதிராஜாவின் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். அவர் அலுவலகத்துக்கு முன் கூட்டம் கூடியதால் பரபரப்பான சூழல் உருவானது.

இதையடுத்து இணை இயக்குனர்களுக்கு பாரதிராஜா ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என்மீது நீங்கள் வைத்துள்ள பற்றுக்காக காலம் முழுவதும் உங்களுக்காக பணியாற்ற ஆசை. ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல எனது சூழ்நிலை மற்றும் சொந்தப்பணிகள் காரணமாக நான் ஒதுங்கியிருக்கிறேன். என்னை யாரோ மூளைச்சலவை செய்துவிட்டதாக சொல்லியிருப்பது மனவேதனையை அளித்துள்ளது. தற்காலிகமாகதான் இப்போது ஒதுங்கியிருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக பணியாற்றுவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்