பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் முதல் நாளில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அங்கு வரவேண்டாம் என காவல்துறை அனுமதி மறுத்ததையும் மீறி அல்லு அர்ஜுன் வந்ததாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அல்லு அர்ஜுனின் கைதுக்கும் இதுதான் காரணமாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் மேல் எந்த தவறும் இல்லை எனக் கூறியதை அடுத்து தெலங்கானா போலீஸ் அடுத்த குற்றச்சாட்டை அவர் மேல் வைத்துள்ளது. அதில் “சம்மந்தப்பட்ட பெண் நெரிசலில் சிக்கி இறந்தசெய்தி அவரிடம் சொல்லப்பட்ட போதும் அவர் வெளியேற மறுத்து படம் முழுவதையும் பார்த்த பின்னரே சென்றார்” எனக் கூறி அதற்கான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.