சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த நோய் தொற்றிலிருப்பவர்களை குணப்படுத்த மருத்துவர்கள் தங்களது உயிரை பனையவைத்து மக்களுக்காக சேவை செய்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் மக்களுக்கு சிகிச்சை செய்து வந்த மருத்துவர் ஒருவர் அந்த நோய் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைந்தார். அவரது உடலை புதைக்க கொண்டு சென்றபோது அங்கு வசிக்கும் மக்கள் ஒன்றுகூடி வழிமறித்து போராட்டத்தில் அமளியில் ஈடுபட்டது மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் சசிகுமார், " கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயால் நம்மை வீட்டில் இருக்க சொல்லி , மருத்துவர்கள் , செவிலியர்கள் , காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். ஆனால், அந்த தெய்வங்களுக்கு எதிராக நடந்துள்ள சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிக்கின்றன. அதற்காக மருத்துவர்களிடம் அந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நம்மை பாதுகாப்பவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்காக மரியாதையை கொடுக்க வேண்டும். மனிதம் வளரனும்'' என மிகுந்த உருக்கத்துடன் பேசியுள்ளார்.