லாஜிக் இல்லை.. காமெடியும் பெரிய அளவில் இல்லை.. ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்..!

Mahendran

வியாழன், 24 ஏப்ரல் 2025 (12:59 IST)
சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு, சுந்தர் சி உடன் இந்த படத்தில் இணைந்துள்ளார். எனவே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் முதல் கட்ட விமர்சனங்கள் நெகட்டிவ்வாக வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பள்ளி ஒன்றில் சில தவறான செயல்கள் செய்யப்படுவதால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் சூழ்நிலையில், அந்த பள்ளியின் ஆசிரியர் கேத்தரின் தெரசா உயர் அதிகாரிக்கு புகார் அளிக்கிறார். அவர்கள் ஒரு ரகசிய போலீசான சுந்தர்சியை, ஆசிரியராக அந்த பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அவர் அந்த பள்ளிக்கு ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்தாரா என்பது தான் இந்த படத்தின் கதை.
 
சுந்தர் சி தனது ரகசிய போலீஸ் மற்றும் பள்ளி ஆசிரியர் என்ற கேரக்டரை கச்சிதமாக செய்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு மீண்டும் காமெடி பக்கம் திரும்பியதால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக சுந்தர் சி - வடிவேலு காம்பினேஷன் அசத்தலாக இருக்கும் என்று டிரைலரில் இருந்து தெரிந்தது.
 
ஆனால் சில இடங்களை தவிர, காமெடியில் பெரிய அளவில் நகைச்சுவை இல்லை; ஒருசில இடங்களில் பழைய வடிவேலு நினைவுக்கு வந்தாலும், பல காமெடிகள் பதத்து போன வெடி போல் தான் இருந்தது. 
 
சுந்தர் சி - வடிவேலு  காமெடியை அடுத்து சந்தான பாரதிக்கு அழுத்தமான கேரக்டர் இருந்தாலும், அவர் இரண்டாம் பாதியில் காணாமல் போய்விட்டதால் படம் சோர்வை நோக்கி செல்கிறது. கேத்தரின் தெரசா ஆரம்பத்தில் நன்றாக நடித்தாலும், அதன் பிறகு அவர் கவர்ச்சி பக்கம் சென்று விடுகிறார். அவருடைய பங்கும் இரண்டாம் பாதியில் முக்கியத்துவம் இல்லாமல் போயிருக்கின்றனர்.
 
வழக்கம் போல பாடல்களில் கவர்ச்சியை திணித்து, சுந்தர் சி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இரண்டாம் பாதி படம் மிகவும் மெதுவாக நகருகிறது. குறிப்பாக பள்ளியை மட்டுமே மையமாக வைத்து கடைசி வரை கொண்டு செல்லாமல், திடீரென கதை வேறு இடத்திற்கு திரும்புகிறது.
 
இருப்பினும், லாஜிக்கை மறந்துவிட்டு குடும்பத்தோடு ஒரு சில இடங்களில் சிரிக்கலாம் என்றால் மட்டும் இந்த படத்தை பார்க்க செல்லலாம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்