'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது எங்களுக்கு வித்தியாசமான அனுபவம்!

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (16:26 IST)
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்து, அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் கூறியதாவது:-
 
சரத்குமார் பேசும்போது :-
 
சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் என்று பன்முக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்மையில் சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். இயக்குநர் தனா இயக்குநர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் கதையை எங்கள் இருவருக்கும் கூறினார். கதையைக் கேட்டதும் இருவருக்கும் பிடித்திருந்தது. மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள், வெற்றி தோல்விகள் ஆகியவற்றை எப்படி சந்திக்கின்றார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதில் நடிப்பதில் எங்கள் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்து வரும் ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இருவரும் போட்டியாக நினைத்ததில்லை. அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து அதற்கு என்ன தேவையோ அதை உள்வாங்கி அப்படி தான் நடிப்போம்.
 
மேலும், ராதிகா சில விதிமுறைகளை வைத்திருப்பார். ஆனால், இப்படத்திற்காக அதை மீறிப் பணியாற்றினார். ஆரோக்கியம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். ஆகையால், உடலை ஆரோக்கியமாக பார்த்து கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று என் தந்தை கூறியதை நான் பின்பற்றி வருகிறேன். அது தான் நான் சுறுசுறுப்பாக இயங்க காரணம். ராதிகாவிடம் கோவம் மட்டும் தான் பிடிக்காத விஷயம். அதை தவிர மற்ற அனைத்து விஷயங்களும் பிடிக்கும். கோவத்தை உடனே வெளிப்படுத்தக் கூடாது என்பது எனது கருத்து.
 
மேலும்,  ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என்பது என் கருத்து. ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் போது அவர்களின் மொழியில் பேசினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி தனி தான். ஒருவரை தொடர்பு கொள்வதற்கு மொழி என்பது எளிமையான கருவி என்றே கூறலாம். எனக்கு ரஷ்ய மொழி, ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரியும். எங்கள் குடும்பத்தில் பல மொழிகள் பேசுபவர்கள் உண்டு. ராதிகாவும் தென்னிந்திய மொழிகள், சிங்களம், ஹிந்தி நன்றாக பேசுவார். ஆனால், இந்த முறை சில தவிர்க்க முடியாத காரணத்தால் செல்ல முடியாது என்பது வருத்தமாக தான் இருக்கிறது என்று சரத்குமார் கூறினார்.
 
நடிகை ராதிகா சரத்குமார் பேசும் போது:-
 
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் செய்யும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
நாங்கள் இருவருமே செய்கின்ற வேலையை விருப்பத்துடன் செய்கிறோம். ஆகையால்தான் பல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது. எங்களுக்கு பிடித்த பல விஷயங்களை செய்வதற்கு கடவுளின்  அனுக்கிரகம் தான் காரணம் என்று கூறுவேன்.
 
இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. பலரும் கதை கூறி இருக்கிறார்கள் ஆனால் எங்களுக்கு எதுவும் பிடிக்கவில்லை. தனா கூறிய
கதையைக் கேட்டதும் எங்கள் இருவருக்குமே பிடித்துவிட்டது. படப்பிடிப்பு நடத்திய விதமும், கதாபாத்திரங்கள் அமைந்த விதமும் மிக அழகாக இருக்கிறது. இப்படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் தீவிரமானதாக இருக்கும். நடிப்பில் இருவருக்கும் எப்பொழுதும் போட்டி இருந்தது கிடையாது.
 
பொதுவாக நான் மாலை 6 மணிக்கு மேல் பணியாற்றும் மாட்டேன். ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்ற மாட்டேன். இது வரை இப்படித்தான் இருந்து வந்தது. ஆனால், இந்த படத்தில் விதிவிலக்காக மாறிவிட்டது. இயக்குநர் தனாவைப் பொறுத்தவரை கதை எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். தேவையில்லாத காட்சிகளை எடுத்து நேரத்தை வீணடிக்க மாட்டார்.
 
மேலும், நான் செய்யும் வேலைக்கு முன்னுரிமை கொடுப்பேன். தினமும் யோகா செய்வேன். இருவருமே உணவில் கவனத்துடன் இருப்போம். இந்த ஒழுக்கம்தான் எங்களை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது. சரத்குமார் அருமையான மனிதர் மற்றும் அவருடைய விடா முயற்சி இரண்டும் அவரிடம் பிடித்த விஷயம். கர்ணனே வெட்கப்படும் அளவிற்கு தானம் செய்வது அதிலும் உண்மையாகவே உதவி தேவையா என்று ஆராயாமல் செய்வது பிடிக்காது என்று ராதிகா சரத்குமார் கூறினார். 
              

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்