உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை நடைபெற உள்ளதை அடுத்து டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நாளை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த போட்டியை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து அகமதாபாத்துக்கு ரசிகர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக டெல்லி, மும்பையில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை அகமதாபாத் வந்து சேரும். அதன்பின்னர் இறுதிப் போட்டி முடிந்த பின்பு திங்கள்கிழமை அதிகாலை 2.30மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, டெல்லிக்கு திரும்பிச் செல்லும்.
அதேபோல் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகின்றன. இதில் ரூ.620 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.1665 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.