முதல் டி 20 யில் நியுசிலாந்து அபார பேட்டிங் – வாரி வழங்கும் இந்திய பவுலர்கள் !

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (13:47 IST)
இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் டி 20 போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது.

நியுசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து ஆட்டத்தைத் தொடங்கிய நியுசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான செய்ஃபர்ட் மற்றும் காலின் மன்ரோ இருவரும் இந்திய பந்துவீச்சை ஒருக் கைப் பார்த்தனர். ஓவருக்கு 10 ரன்கள் வீதம் ரன்களை இந்த ஜோடி சேர்க்க ரன் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய மன்ரோ 20 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து குருனால் பாண்ட்யா பந்தில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான செய்ஃபர்ட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்து 43 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து அவுட்  ஆனார்.

இதையடுத்து டேரில் மிட்செல்லை தினேஷ் கார்த்தி பவுண்டரிக்கு அருகில் ஒரு அற்புதமான கேட்ச் மூலம் அவுட் ஆக்கி வெளியேற்றினார். அதற்கு அடுத்த பந்தே கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடிவந்த 21 பந்துகளில் 34 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சற்று முன்பு வரை நியுசிலாந்து 15.1 ஓவர்களில் 161 ரன்களை சேர்த்து 4 விக்கெட்களை இழந்துள்ளது. ராஸ் டெய்லரும் காலின் கிராண்ட்ஹோமும் களத்தில் உள்ளனர்.

இந்தியா சார்பில் கலீல் அஹமது, ஹர்திக் பாண்ட்யா, குருனால் பாண்ட்யா மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இன்னும் 5 ஓவர்கள் மீதமிருக்கையில் நியுசிலாந்து அணி கண்டிப்பாக 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்