உலகக்கோப்பைப் போட்டிகளில் இருந்து தவான் விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் சதம் அடித்து கலக்கினார் ஷிகார் தவான். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த போட்டியில் அவருக்குக் கைவிரலில் காயம் பட்டது. அது தொடர்பான மருத்துவ அறிக்கையில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை ஸ்டாண்ட்பை அணியாக பிசிசிஐ அறிவித்துள்ள ஸ்டாண்ட்பை அணியில் அம்பாத்தி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரில் யாரை பிசிசிஐ தேர்வு செய்யவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கவாஸ்கர் ‘ ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சிறப்பான பார்மில் இருக்கிறார். அவரை தேர்வு செய்தால் தன்னை முதலிலேயே தேர்வு செய்திருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு சிறப்பாக விளையாடுவார்’ எனத் தெரிவித்துள்ளார். ஆனால் கம்பீரோ ‘ ராயுடுவை தேர்வு செய்யவில்லை எனில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும். அவர் 45 ரன்களை சராசரியாக வைத்துள்ளார். அவர் தேர்வு செய்யப்படாதது மிகப்பெரிய ஏமாற்றமே’ எனக் கூறியுள்ளார்.
கெவின் பீட்டர்சனோ ‘ தவானுக்குக் காயம் ஏற்பட்டதும் உடனடியாக ரிஷப் பண்டைதான் தேர்வு செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார். பிசிசிஐ இன்னும் மாற்று வீரர் யார் என அறிவிக்கவில்லை.