ஊரடங்கால் தனது சொந்த ஊரில் சிக்கிக்கொண்ட நடுவர் அனில் சௌத்ரி நெட்வொர்க் கிடைக்காமல் பட்ட அவஸ்தைகளை புகாராக பதிவு செய்திருந்தார்.
கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணிபுரியும் அனில் சௌத்ரி தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த போது கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அங்கேயே முடக்கப்பட்டார். அந்த ஊரில் சரியாக நெட்வொர்க் கிடைக்காததால் அவர் பல இன்னல்களுக்கு ஆளானார். இதனால் ஆன்லைன் வழியாக நடந்த சர்வதேச நடுவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கூட அவர் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த ஊரில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மரத்தின் மேல் அமர்ந்தால்தான் நெட்வொர்க் கிடைக்கும் என்ற மோசமான நிலைமையில் இருந்தார்கள்.
இது சம்மந்தமாக அனில் சௌத்ரி தனது சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் வேகமாக பரவவே செல்போன் நிறுவனங்களின் காதுகளுக்கும் சென்றுள்ளது. இதையடுத்து இப்போது செல்போன் நிறுவனம் ஒன்று அந்த ஊருக்கு நெட்வொர்க் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக அந்த பகுதி மக்கள் அனில் சௌத்ரிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் பல புகார்களையும் அனில் சௌத்ரியிடம் முறையிடுவதாகவும், ஆனால் தான் வெறும் கிரிக்கெட் நடுவர்தான் என அவர்களிடம் சொல்லிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.