ஆசியக் கோப்பை வரலாறு -பாகம் இரண்டு

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (18:39 IST)
ஆசியாவின் கிரிக்கெட் அணிகளை வலுப்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட ஆசியக்கோப்பைக் கடந்து வந்தப் பாதையின் இரண்டாம் பாகம்.

ஆசியக்கோப்பையின் எட்டாவது தொடர் 2004 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது. இம்முறை ஹாங்க் காங்க் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் முதன் முதலாக சேர்க்கப்பட்டன. மொத்தம்  6 அணிகள் விளையாடிய இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியனானது

2008 ஆம் ஆண்டு ஒன்பதாவது ஆசியக்கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. கடந்த முறை விளையாடிய அதே 6 அணிகள் இம்முறையும் கலந்து கொண்டன. இலங்கையும் இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன. இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தது.

2010 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பத்தாவது தொடரில் டெஸ்ட் அங்கிகாரம் பெற்ற இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் மட்டுமே பங்கேற்றன. இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கையை வீழத்தி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

2012 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற பதினொன்றாவது தொடரில் முதன் முதலாக வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. பாகிஸ்தானுடன் மோதிய அந்த அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்தது.

பனிரெண்டாவது ஆசிய கோப்பைத் தொடர் 2014 ஆம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக வங்கதேசத்திலேயே நடைபெற்றது. இம்முறை முதன்முதலாக ஆஃப்கானிஸ்தான் அணி சேர்த்துக்கொள்ளப்பட்டு ஐந்து அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி ஐந்தாவது முறையாக சாம்பியனானது.

ஆசியக்கோப்பையின் பதிமூன்றாவது தொடர் மூன்றாவது முறையாக தொடர்ந்து வங்கதேசத்திலேயே 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இம்முறை தொடர் முதல்முறையாக இருபது ஓவர் போட்டித் தொடராக நடத்தப்பட்டது.  இத்தொடரில் இரண்டாவது முறையாக வங்கதேசம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. வங்கதேசத்தை வென்ற இந்தியா ஆறாவது முறையாக ஆசியக் கோப்பையின் சாம்பியனானது.

ஒட்டுமொத்தமாக ஆசியக்கோப்பையைப் பொறுத்தவரை இந்திய அணியே வலுவான அணியாக உள்ளது. இந்தியா இதுவரை நடைபெற்றுள்ள பதிமூன்று தொடரில் 6 முறை சாம்பியனாகவும் மூன்று முறை இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.அதற்கடுத்த இடத்தில் இலங்கை 5 முறை சாம்பியனாகவும் 6 முறை இறுதிப்போட்டிக்கும் தகுதிப் பெற்றுள்ளனர்.

ஆசியக் கோபைத் தொடரில் ஒட்டு மொத்தமாக பேட்டிங்கில் சிறந்த வீரராக இலங்கையின் சனத் ஜெயசூரியா செயல்பட்டுள்ளார். அவர் இதுவரை ஆசியக்கோப்பையில் 1220 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.

பவுலிங்கிலும் இலங்கையைச் சேர்ந்த லசித் மலிங்காவே முதல் இடத்தில் உள்ளார். அவர் இதுவரை மொத்தமாக 33 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்