அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் விழித்திரு படத்தை எடுத்திருக்கிறார். பெயருக்கேற்ப முழுக்க இரவில் நடக்கும் கதையிது. கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு என்று மூன்று நாயகர்கள், தன்ஷிகா, அபிநயா என்று இரண்டு நாயகிகள்.
விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மீரா கதிரவன் தனது மனக்குமுறலை கொட்டினார்.
விழித்திரு படத்தைத் தொடங்கி இரண்டு வருடங்களாகிறது. படம் இவ்வளவு நாள் இழுத்துக் கொண்டு போனதில் அஜித்தின் பங்கும் இருக்கிறது என்று அவர் சொன்ன போது, அட போட்டு நிமிர்ந்து உட்கார்ந்தது நிருபர் கூட்டம்.
விழித்திரு படம் தொடங்கி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான் அஜித்தின் வீரம் படப்பிடிப்பும் நடந்தது. வீரத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவர் விதார்த். விழித்திரு, வீரம் படங்களின் தேதிகள் கிளாசானதால், கொஞ்ச நாள் விதார்த்தை விட்டுத்தர முடியுமா என்று அஜித் கேட்கச் சொன்னதாக மீரா கதிரவனிடம் வந்து கேட்டிருக்கிறார்கள். அஜித்தே கேட்கும் போது அப்பீல் ஏது என்று அனுப்பி வைத்திருக்கிறார். விதார்த் வீரத்தை முடித்துக் கொண்டு வந்த போது நிலைமை மாறியிருந்தது.
விழித்திரு படத்தில் விதார்த்துடன் 20 பேர் நடித்து வந்தார்கள். விதார்த் வீரத்துக்குப் போனதால் 19 பேர்களின் கால்ஷட் வீண். மறுபடியும் அவர்களை ஒன்றிணைத்து படப்பிடிப்பை நடத்துவதற்குள் ஆறு மாதம் ஓடிப்போய் நாக்கும் தள்ளியிருக்கிறது மீரா கதிரவனுக்கு.
விதார்த்துக்காக இப்படியெல்லாம் கஷ்டப்பட்டும் விழித்திரு விழாவுக்கு அவர் வரவில்லை. போஸ்டரில் மட்டும் படத்தை பெருசா போடுங்கன்னு கேட்க தெரியுது, ஆனா படத்தோட விளம்பர விழாவுக்கு வரமாட்டாங்க என்று பொது மேடையிலேயே விளாசினார் மீரா கதிரவன்.
படத்தின் நாயகி தன்ஷிகா, பாலியல் தொல்லைக்கு உள்ளானது குறித்து பேசினார். அதுதானே இப்போது பேஷன்.
விழித்திரு படத்தில் தன்ஷிகா டிஆரின் ரசிகையாக வருகிறாராம். அவர் தனது படங்களில் நாயகியே தொட்டே பேச மாட்டார்னு கேள்விப்பட்டிருக்கேன். அவரோட ரசிகரா நடித்ததில் பெருமை என்றார்.
(ரஜினி தனது படங்களில், பெண்ணுன்னா அடக்கமா இருக்கணும், அடங்கிப் போகணும்னு பிற்போக்குக் கருத்துகளை பேசுவார். அதற்காக, கபாலியில் ரஜினியுடன் நடித்ததை தன்ஷிகா சிறுமையாகக் கருதினாரா? இல்லையே. அப்புறம் டிஆர் ரசிகையா நடித்ததில் மட்டும் என்ன பெயருமை வேண்டியிருக்கிறது?)
கேரளாவில் தனக்கு நேர்ந்த மிட் நைட் அட்டாக்கை குறித்தும் தன்ஷிகா குறிப்பிட்டார். இரவு நேரம் ஷுட்டிங் முடித்துத் திரும்பிய தன்ஷிகாவை சில குடிகாரர்கள் மறித்து தொல்லை கொடுத்திருக்கிறார்கள். பேராண்மை படத்துக்காக கத்துகிட்ட சிலம்பாட்டத்தை வைத்துதான் அவர்களிடமிருந்து தப்பித்தேன் என்றார். அதாவது கத்துகிட்ட மொத்த வித்தையையும் குடிகார்களிடம் இறக்கி வைத்திருக்கிறார். தற்காப்புக்கலை பெண்களை காப்பாற்றும் என்று அவர் சொன்னது முழுக்க உண்மை.
தன்ஷிகா கத்துகிட்டது சிலம்பம் என்பதால் எப்படியோ தப்பித்தார். குடிகாரர்கள் வம்பு செய்த இடத்தில் கம்போ கழியோ கிடைத்திருக்கும், எடுத்து சுழற்றியிருப்பார். அவர் பயிற்சி எடுத்தது துப்பாக்கியாக இருந்திருந்தால், அந்த அர்த்த ராத்திரியில் துப்பாக்கிக்கு எங்கு போயிருப்பார்?
விழித்திரு பிரஸ்மீட் இரண்டு பேரின் பேச்சால் ரொம்பவே என்டர்டெயினாக கழிந்தது.