ஃபேஸ்புக் காதலியை முதன்முறை பார்த்ததும் குத்திக் கொன்ற வாலிபர்

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (17:44 IST)
பேஸ்புக்கில் பழகிய இளம்பெண்ணை முதன்முறை நேரில் பார்த்ததும் குத்திக் கொன்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
ராமநாதபுரம், முதுகுளத்தூரைச் சேர்ந்த, ஏ.வேம்புராஜ் (28). அதேபோல், கோவை, காந்திபார்க் அருகே இருக்கும் உப்பாரா தெருவைச் சேர்ந்தவர் கனகலட்சுமி (21). கோவை பாரதியார் பல்கலையில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வேம்புராஜ், கனகலெட்சுமி இருவரும் முகநூலில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
 
தொடர்ந்து இருவரும் தங்களைப் பற்றியான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். வேம்புராஜ் தான் பி.இ. சிவில் எஞ்சினீரிங் படித்துள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பேசி வந்துள்ளனர்.
 
ஒரு கட்டத்தில், கனகலட்சுமியிடம் வேம்புராஜ் காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால், இதற்கு கனகலட்சுமி சம்மதிக்கவில்லை. மேலும், வேம்புராஜ் உடனான  தொடர்பையும் கனகலட்சுமி துண்டித்தார்.
 
பின்னர், கனகலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டு, வேம்புராஜ் மீண்டும் தனது தொடர்பை புதுப்பித்துள்ளார். இதற்கிடையில், வேம்புராஜ், கனகலெட்சுமியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
 
இதற்கு கனகலட்சுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, பல்கலைக்கு அருகே இருக்கும் பஸ் நிறுத்தத்தில் சந்திக்கலாம் என வேம்புராஜ் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், முதல் முறையாக தனது பேஸ்புக் தோழி கனகலட்சுமியை வேம்புராஜ் சந்தித்துள்ளார். அப்போது தனது காதலை கனகலட்சுமியிடம் தெரிவித்து, தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டுள்ளார்.
 
ஆனால், இதனை கனகலட்சுமி கண்டிப்பாக மறுத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த வேம்புராஜ், அருகில் கிடந்த ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து உடைத்து கனகலட்சுமியின் கழுத்தில் குத்தி அவரை கொலை செய்துள்ளார். இதில் கனகலட்சமி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் மிதந்தார்.
 
இதனையடுத்து அங்கிருந்து வேம்புராஜ் தப்பி ஓடிவிட்டார். பிறகு, உக்கிடம் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வேம்புராஜை காவல் துறையினர் கைது செய்து, கோவை மத்தியசிறையில் அடைத்தனர்.
அடுத்த கட்டுரையில்