அரசு நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்படும் பேனர்களில் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பெயர் இடம்பெறாதது குறித்து விசிக எம்.எல்.ஏ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியில் உள்ள நிலையில் நாகப்பட்டணம் தொகுதியில் திமுக கூட்டணியிலிருந்து வெற்றி பெற்ற விசிக கட்சியின் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏவாக உள்ளார்.
சமீபத்தில் நாகப்பட்டிணத்தில் நடந்த அரசு விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆளூர் ஷா நவாஸ் “கடந்த வாரம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பெயர், நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் இடம்பெறவில்லை. அதை எடுத்து வைத்து சமூக வலைதளங்களில் எப்படி சித்தரித்தார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
ஏற்கனவே இந்த கூட்டணியை உடைத்துவிட முடியாதா என வெளியே இருக்கும் சக்திகள் கண்ணும் கருத்துமாக வேலை பார்த்து வருகிறார்கள். இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா? என்ற கேள்விகள் வருகிறது. எங்கள் பெயர் வரவேண்டும் என்பதற்காக நாங்கள் சொல்லவில்லை.
அப்படி பேனரில் பெயர் போட்டுதான் நாங்கள் பிரபலமாக போவதில்லை. ஆனால் அதில் இருக்க கூடிய சுயமரியாதை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கோ அதிகாரிகள் செய்யும் சிறு தவறு இப்படி அரசுக்கு இழுக்கை ஏற்படுத்துகிறது. இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காம பார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K