தமிழக அரசியலில் 1967 ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கிரஸை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பிறகு கருணாநிதி, அஇஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர் அறிமுகப்படுத்திய நடிகை ஜெயலலிதா ஆகியோர் மாறிமாறி தமிழகத்தை ஆண்டு வந்தனர். தற்போது, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பி.எஸ் தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.
இந்தத் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேர்தலில் களம் இறங்க வேண்டுமென்று ஒருமுறை மக்கள் நலக் கூட்டணி வைத்திருந்த பாஜக, பாமக, மற்றும் தேமுதிக கட்சிகள் அதிமுக கூட்டணியில்தான் அங்கம் வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா திராவிட அரசியல் என்பது என்ன என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், திராவிட அரசியல் என்பது...
இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே... கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்... சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும்...
கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே... ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும், தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே...
அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்... லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு...ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதும் தான் திராவிட அரசியல்! என்று பதிவிட்டுள்ளார்.
ஹெச். ராஜாவின் இந்தப் பதிவுக்கு திராவிட கட்சிகள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.