துபாயில் பேரம் படிந்துவிட்டது ; இரு கம்பெனிகள் இணைகிறது - வெற்றிவேல் எம்.எல்.ஏ

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (12:24 IST)
பேரம் படிந்துவ்விட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அணி இணைய இருப்பதாக தினகரன் ஆதரவு வெற்றிவேல் எம்.எல்.ஏ கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சில அறிவிப்புகளை அடுத்து, அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும் என அவர் கூறியுள்ளார்.
 
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனை ஓரங்கட்டும் விதமாகவே எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் செயல்பட்டு வருவது, தினகரன் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவு வெற்றிவேல் எம்.எல்.ஏ  “ஊர் மக்களுக்கு ஒரு கிணற்றை கூட இலவசமாக தர முன்வாராதவர் ஓ.பி.எஸ். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்தவர். இரட்டை இலை முடக்கப்பட்டதற்கும் அவரே காரணம். தற்போது பேரம் படிந்து விட்டது. துபாயில் பணம் செட்டில் ஆகிவிட்டது. எனவே தற்போது இரு அணிகளும் இணைவதாக பேசி வருகிறார்கள்.
போயஸ் கார்டன் வீட்டை அரசு அபகரிப்பதை ஏற்க முடியாது. சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் உடமைகள் அங்குதான் இருக்கிறது. அவர்களின் முகவரியும் அதுதான். அதையும் மீறி செயல்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
போயஸ் கார்டன் இல்லத்தை, சசிகலாவின் ஒப்புதலின்றி நினைவிடம் ஆக்க முடியாது... தற்போது பேரம் படிந்துவிட்டது. இணைவது இரு அணிகள் அல்ல. இரு கம்பெனிகள் இணைகின்றன” என அவர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்