பொள்ளாச்சி பயங்கரம் ; அதிமுக அரசை எப்படி நம்புவது ?- வேல்முருகன் கேள்வி

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (11:02 IST)
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் தொடர்பான விசாரணையில் ஆளும் அதிமுக அரசு முறையாக விசாரணை நடத்தும் என நம்பமுடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் பயங்கர சம்பவங்கள் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இதில் அதிமுக பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பான விசாரணையில் அதிமுக அரசு நேர்மையாக விசாரணையை மேற்கொள்ளும் என நம்பமுடியாது. அதனால் நீதிமன்றமே நேரடியாக  முன்வந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

’ பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவி ஒருவர் காவல் நிலையம் வந்து புகார் ஒன்றை அளித்தார். தன்னை ஒரு கும்பல் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும், அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்தே புகார் அளிப்பதாகவும் போலீஸாரிடம் அவர் கூறினார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் 4 இளைஞர்களைக் கைது செய்தனர். அந்த இளைஞர்கள் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர்.

அவர்களிடமிருந்து நிறைய ஆபாச வீடியோக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில் அந்த இளைஞர்களிடம் சிக்கிப் பெண்கள் துன்புறும், கதறும் காட்சிகள் உள்ளன. அந்தப் பெண்கள் பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் மணமான இளம் பெண்கள். அப்பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியது மட்டுமன்றி, அதனை வீடியோ எடுத்து, அவர்களிடமே காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகநூல் வழியாக நட்பு கொண்டு, காதலிப்பதாகக் கூறி, பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 4 இளைஞர்களோடு ஒரு கும்பலே உள்ளது; ஆனால், இந்த 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர்; மீதிப் பேரைக் கைது செய்யாததற்கு ஆளும்கட்சியினர் தொடர்பு தான் காரணம் என்று சொல்லும் பொதுமக்கள், இந்த 4 பேரைக் கைது செய்தும்கூட, 10 நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் மேல் எஃப்ஐஆர் போடப்பட்டது என்கின்றார்கள். நான்கு பேரும் நேற்று முன்தினம் பொள்ளாச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக, #ArrestPollachiRapists என்கிற ஹேஷ்டேகில் வலைதளத்தில் கண்டனங்கள் வலம்வருகின்றன. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் காட்டுத்தீயாகப் பரவுகிறது.

இதற்கிடையில், புகார் அளித்த பெண்ணின் அண்ணனை 4 பேர் கொண்ட கும்பல் மோசமாகத் தாக்கி, புகாரை வாபஸ் பெறச் சொல்லியிருக்கிறார்கள். அந்த 4 பேர் செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர். இதில் பார் நாகராஜ் தான் மொத்த கும்பலுக்கும் மூளை என்று தெரிவிக்கப்படுகிறது. இவர் அதிமுக புள்ளி; ஜெயலலிதா பேரவைச் செயலராக உள்ளார். நான்கு நாட்களுக்கு முன் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்; ஆனால் மூன்றே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

புகார் கொடுத்த மாணவியின் அண்ணன் தாக்கப்பட்டதன்றி, மாணவி சார்பில் வாதாட முன்வந்துள்ள பெண் வழக்கறிஞருக்கும் இப்போது மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது.பார் நாகராஜ் ஆளுங்கட்சிப் புள்ளி என்பதால், அவர் தலைமையிலான குற்றவாளிகளைக் காப்பாற்றவும் விவகாரத்தை மூடி மறைக்கவுமே நால்வரும் விடுவிக்கப்பட்டனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் முதலில் கைது செய்த 4 பேரை வைத்தே விசாரணையை இழுத்தடித்து வழக்கை நீர்த்துப்போகச் செய்வதுதான் திட்டம் என்றும் சொல்கிறார்கள்.

இதனால் வழக்கை சிபிசிஐடி, சிபிஐ போன்ற அமைப்புகளே விசாரிக்க வேண்டும் என்பவர்கள் ஒருபுறம் என்றால், உயர் நீதிமன்றம் இதில் நேரடியாகத் தலையிட்டு அதன் மேற்பார்வையில்தான் விசாரண நடைபெற வேண்டும் என்கின்றனர் பெருவாரியான மக்கள். இதற்காக மக்கள் போராட்டத்திலும் இறங்கியுள்ளனர்.இந்த நிலையில், பார் நாகராஜை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர். ஆனால், இதுவும் ஒரு தந்திரம்தான் என்கின்றனர் மக்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடத்தப்படும் கண்துடைப்பு நாடகம் இது என்கின்றனர்.

இதுவரை எந்தப் பிரச்சினையிலும் நேர்மையாக நடந்துகொள்ளாத அதிமுக அரசு இதில் மட்டும் எப்படி நேர்மையாக நடந்துகொள்ளும? ஆகவே தான், உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இதில் விசாரணை நடத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்