நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் திமுக மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகளின் கீழ் அணிதிரண்டு வருகின்றன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகியக் கட்சிகள் மட்டும் தனித்துப் போட்டியென அறிவித்துள்ளன. அதுபோல புதியத் தமிழகம் கட்சி பாஜகவோடுக் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரையில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என தற்போதுக் கூறியுள்ளார்.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் பேசினார். அப்போது ‘எங்களுடைய பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசும், தமிழக அரசும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. ஆனாலும் வர்விருக்கும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் புதிய தமிழகம் கட்சி உள்ளது’ எனக் கூறினார்.
மேலும் கூட்டணித் தொடர்பாக பதிலளிக்கையில் ‘ஏழு சமூகத்தைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவிப்பதில் அரசுக்கு எந்த நிதிச்சுமையும் வரப்போவதில்லை. வரும் மார்ச் 6ஆம் தேதிக்குள் அதை அறிவித்தால் அதற்குத் தகுந்தாற்போல கூட்டணி அமைக்கப்படும். இல்லையெனில் வேறு எதாவது கட்சகள் தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து குறிப்பிட்டால் அந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி பரிசீலிப்போம். இந்த இரண்டும் இல்லாதபட்சத்தில் 12 சட்டமன்ற தொகுதிகள், 20 மக்களவைத் தொகுதிகளைத் தேர்வு செய்து மக்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.