மைக்ரோசாப்ட் நிறுவனம், சமீபத்தில் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. உலகளவில் உள்ள தனது ஊழியர்களில் 3 சதவீதமானவர்கள், அதாவது 6,000-க்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாகவும், மைக்ரோசாப்ட் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2.28 லட்சம் ஊழியர்களை வேலையிலிருந்து விலக்கியது. அதேபோல, 2023-ஆம் ஆண்டிலும் 10,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை, நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்ப்பை மீறி உயர்ந்திருந்தாலும், தொழில்நுட்ப துறையில் கடும் போட்டி நிலவுவதால், செயல்திறனை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவை மையமாக கொண்டு எதிர்கால வளர்ச்சிக்கான முயற்சிகளை மைக்ரோசாப்ட் மேற்கொண்டு வருகிறது. இந்த மாற்றம் காரணமாக, நிறுவனத்துக்குள் சில வேலைகள் தேவையற்றதாகக் கருதப்பட்டு, அந்த இடங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த நிலைமை, டெக் துறையில் வேலை பார்க்கும் பலரிடையே குழப்பம் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நிறுவனங்களும் கூட ஊழியர்களை குறைக்கும் நிலைக்கு சென்றுவிட்டன என்ற உண்மை, தொழில்நுட்ப உலகில் நிலவும் நிலையினை வெளிப்படுத்துகிறது.