திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் எனபதுதான் தற்போதைய தமிழக அரசியலின் விவாதப்புள்ளியாக இருக்கிறது.
5 மாத காலமாக காலியாக இருந்த கலைஞரின் சட்டமனறத் தொகுதியான திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் வரும் ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் அறிவித்துள்ளது. அதையடுத்து இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளின் மும்முனைப் போட்டியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பெரிய கட்சிகள் விலகிக்கொண்டன அல்லது இந்த மூன்று கட்சிகளில் யாருக்காவது தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக திமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தொண்டர்கள் மற்றும் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் நிற்கவேண்டுமென அவர் சார்பாக விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். மேலும் சிலரோ திமுக தலைவர் ஸ்டாலின் இந்த தொகுதியில் நிற்க வேண்டுமெனக் கூறி வருகின்றனர்.
திமுக வேட்பாளராக திருவாரூரைச் சேர்ந்த பூண்டிக் கலைவாணன் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அப்புறம் ஏன், உதயநிதி ஸ்டாலின் பெயரில் அவரே விருப்பமனு தாக்கல் செய்யவேண்டுமென யோசிக்கிறீர்களா?. அங்குதான் இருக்கிறது உதயநிதியின் மாஸ்டர் ப்ளான். என்னதான் கலைஞரின் பேரனாகவும், ஸ்டாலினின் மகனாகவும் இருந்தாலும் திடீரென உதயநிதியை திமுக வில் முன்னிறுத்துவது திமுக தொண்டர்கள் உள்பட தலைவர்கள் சிலருக்குமேக் கூட பிடிக்கவில்லையாம். அரசியல் விழாக்களில் மேடைகளில் அவரை உட்கார வைப்பதுக் கூட சிலருக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியிருக்கிறதாம். மேலும் பல ஆண்டுக் காலமாக பாடுபட்ட தொண்டர்களுக்கு உதயநிதிக் கையால் பரிசுப் பொருட்கள் தருவதா? எனப் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளித்து திமுக வில் தன்னை அசைக்கமுடியாத சக்தியாக உருவாக்கிக் கொள்ள இந்த இடைத்தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார், உதய்.
திருவாரூர் தொகுதி திமுக வின் கோட்டையாக திகழ்கிறது. கடந்த 22 ஆண்டுகளாக இந்த தொகுதியில் திமுக வேட்பாளர்கள் யாரும் தோற்றதேயில்லை என்ற வரலாறு இருக்கிறது. இந்நிலையில் தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் நிற்கும் திமுக வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறாராம் உதயநிதி. மேலும் இந்த தேர்தலில் கிடைக்கப்போகும் வெற்றிக்கு முழு முக்கியக் காரணம் உதயநிதிதான் என்று கட்சிக்குள் உள்ள் அனைவருக்கும் தோன்றும்படி செய்யவேண்டும் எனவும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்ட்டிருக்கிறார். இதனால் உதய் ரசிகர்கள் திருவாரூரை மையமிட்டு தீயாய் வேலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆக, இந்த இடைதேர்தல் திமுக வின் அடுத்த தலைவராக மாறும் ஆசையில் இருக்கும் உதயநிதிக்கு அச்சாரமாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.