ஈரோட்டில் தொடர்ந்து பல நோய்களால் அவதிப்பட்டு வந்ததால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (55). இவரது மனைவி சுஜிதா. இவர்களுக்கு தான்யலட்சுமி என்ற 20 வயது மகளும் உள்ளார். தான்யலட்சுமிக்கு சிறுவயது முதலே மனநல பாதிப்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தாய், தந்தையரே அவரைக் கவனித்துக் கொண்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில் தாயார் சுஜிதாவிற்கு தைராய்டு பிரச்சினை ஏற்படவே அதற்கு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் தந்தை நாகேந்திரனுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. அனைவருக்குமே உடல்நல பாதிப்புகள் இருப்பதால் தொடர்ந்து அவர்கள் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் மூன்று பேரும் தற்கொலை செய்துக் கொண்டு இறந்துள்ளனர். வீட்டில் மூவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூவருமே உடல்நல பாதிப்பு காரணமாக விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
Edit by Prasanth.K