நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை வேலையை உதயநிதியே செய்கிறார்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

Siva
வியாழன், 17 அக்டோபர் 2024 (15:17 IST)
அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதில் துணை முதல்வர் மட்டுமே வேலை செய்கிறார். நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை என அனைத்து துறைகளையும் உதயநிதி ஸ்டாலினே கவனிக்கிறார் என எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
சென்னையில் அதிமுகவின் 53-ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்ற நிலையில் ள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 
வெள்ளை அறிக்கை கேட்பவர்களுக்கு தெளிவற்ற பதில்களை அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மழை பெரிதாக இல்லாததால், பல இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. ஆனால் தொடர்ந்து மழை பெய்திருந்தால், நம்மால் வெளியே செல்வதற்கே முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். பல துறைகளை கவனிக்க வேண்டிய அமைச்சர்கள் இருப்பினும், அனைத்தையும் துணை முதல்வர் ஒருவர் மட்டுமே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதிலாக, துணை முதல்வர் மட்டுமே செயல்படுகிறார்.
 
நீர்வள மற்றும் பொதுப்பணித்துறைகள் உள்ளிட்ட அனைத்தையும் உதயநிதி ஸ்டாலினே கவனிக்கிறார். அனுபவமுள்ள அமைச்சர்களின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், உதயநிதியை முன்னிலையாக கொண்டு திமுக செயல்படுகிறது. குடும்ப நலனை முன்னிறுத்தி, நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது, சென்னை நகரத்தில் நீரை எவ்வாறு வெளியேற்றப்போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
 
முன்னதாக, 'எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மழைநீர் வடிகால் பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை கோரியதற்கு சென்னை நகரத்தில் மழைநீர் எங்கும் தங்காமல் உள்ளது, அதுவே வெள்ளை அறிக்கை' என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்