மழைநீர் தேங்காமல் இருப்பது தான் வெள்ளை அறிக்கை: ஈபிஎஸ்-க்கு உதயநிதி பதிலடி..!

Mahendran

புதன், 16 அக்டோபர் 2024 (15:05 IST)
சென்னையில் மழைநீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
 
தமிழகத்தில் இரண்டு நாட்களாக நீடித்த கன மழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதற்கிடையில், மழை பாதிப்பு மற்றும் முன்னேற்பாடுகளை மதிப்பீடு செய்யும் விதமாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். மழையால் ஏற்படும் சிக்கல்களை முறையாக கையாள அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு மையத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
 
மூன்றாவது நாளாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் யானைகவுனி உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற நடவடிக்கைகளை நேரில் கண்காணித்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு மற்றும் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் பேசின் பிரிஜ் பகுதியில் வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கால்வாய் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். இடையே, தூய்மை பணியாளர்களுடன் நட்பாக உரையாடி, தேநீர் அருந்தினார்.
 
அதற்குப் பிறகு, சென்னையில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளர்கள் மற்றும் சாலைத் தொழிலாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம் – திருவல்லிகேணி தொகுதியில் நிவாரணப் பொருட்களுடன் ரூ. 1000 வழங்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது தயாநிதி மாறன் எம்.பி. உடனிருந்தார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "அனைத்து துறைகளும் களத்தில் இறங்கி மழை பாதிப்பை சமாளித்து வருகின்றன. தூய்மை பணியாளர்கள், மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி" என்றார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் "வெள்ளை அறிக்கை" கோரிக்கைக்கு பதிலளிக்கும்போது, "சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என்பதே நமது வெள்ளை அறிக்கை; தமிழ் நாட்ட அரசு விரைந்து செயல்படுகிறது, மேலும் கனமழையை எதிர்கொள்வதற்கும் தயாராக உள்ளது" என்று குறிப்பிட்டார்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்