தினகரனின் மனதை மாற்றிய ஆர்.கே.நகர் வெற்றி : இனி வேறு திட்டம்?

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (11:40 IST)
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி டிடிவி தினகரனின் எண்ண ஓட்டங்களை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

 
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். 
 
அந்நிலையில், வெற்றி பெற்ற தினகனுக்கு, நேற்று காலை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற எனக்கு வாக்களியுங்கள் என ஆர்.கே.நகர் மக்களிடம் கோரிக்கை வைத்தேன். அதை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.  
 
அதிமுகவிற்கு ரத்தமும், சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கும் 5 பேரின் சுயநலத்தால் அதிமுகவிற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது அவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல், அரசியலில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். 
 
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். இவர்களின் ஆட்சி இன்னும் 3 மாதத்திற்கு மட்டுமே தொடரும் ” எனக் கூறினார்.
 
அதாவது, எடப்பாடி தலைமையிலான ஆட்சியை அகற்றுவோம் எனவே தினகரன் இதற்கு முன்பு பேசிக்கொண்டிருந்தார். அதுதான் அவரின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்கு பின் கட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என அவர் கருதுவதாக தெரிகிறது.
 
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி தவிர மற்ற முக்கிய அமைச்சர்கள் மனதளவில் தினகரனின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இதை தினகரன் அறிந்தே இருக்கிறார். அதனால்தான், ஒரு 5 பேரால் இவ்வளவு பிரச்சனை எனவும், அவர்கள் வழிவிட்டால் எல்லாம் சரியாக நடக்கும் என நேற்றைய பேட்டியில் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்