அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருந்து கொண்டே ஆட்சி செய்வதை குறிக்கும் வகையில் 'குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு' என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு அதிமுக துணைப்பொதுச்செயலாலர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
விஞ்ஞானத் திருடர்கள் என்று அப்போதைய நீதியரசர் சர்க்காரியாவால் விளிக்கப்பட்டவர்கள் யார் என்பதும்; எங்கே அந்த சர்க்காரியா விசாரணை அறிக்கை வழக்காக மாறிவிடுமோ என்று அஞ்சி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் காலைப் பிடித்து, கூடவே கச்சத்தீவு, காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளையெல்லாம் காவு கொடுத்து, தங்களை தற்காத்துக் கொண்டவர்கள் யார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் நீரில் ஒரு ஊழலென பழைய வீராணத்திலும்; நெருப்பில் ஒரு ஊழல் நிலக்கரி இறக்குமதியிலும்; காற்றில் ஒரு ஊழல் என பூச்சி மருந்து தெளிப்பதிலும்; நிலத்தில் ஒரு ஊழலென மஸ்டர் ரோல் உள்ளிட்ட ஏராள ஊழல்களிலும்; ஆகாயத்தில் ஊழல் என அலைக்கற்றையிலும், இப்படி பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து லஞ்ச லாவண்யங்களில் தங்க மெடல் வாங்கிய குடும்பம் யாருடைய குடும்பம் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள் என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் விளாசியுள்ளார்.