ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்கு அரசு சார்பில் ரேசன் கடைகள் வாயிலாக இலவச பொருட்கள் மற்றும் பணம் வழங்குவது நடந்து வருகிறது. கடந்த ஆண்டு திமுக பொறுப்பேற்ற நிலையில் பரிசு பணத்திற்கு பதிலாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் அது விமர்சனத்திற்கு உள்ளானதால் இந்த ஆண்டு இலவச அரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 பணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
ரேசன் அட்டைதாரர்களுக்கு இன்றும், நாளையும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்திற்கு சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 2ம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர் தினம்தோறும் டோக்கன் வாரியாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.